கூடக்கோவில் நாடார்கள் உறவின்முறையைச் சார்ந்த சான்றோர்கள் ஊக்கத்தினாலும் இராவ்சாகிப் A.A. ஆறுமுக நாடார் அவர்களின் நன் முயற்சியாலும் எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் கல்வி பெற்றிடும் உயர் நோக்கோடு 26-4-1929 இல் கூடக்கோவில் நாடார்கள் வித்தியாசாலை துவங்கப்பட்டது.ன் அதற்கு இராவ்சாகிப் A.A. ஆறுமுக நாடார் அவர்கள் தாளாளராகத் திகழ்ந்தார்கள். பின்னர் நாட்டாண்மை உயர்திரு. குருசாமி நாடார் அவர்கள் தாளாளராகப் பணியாற்றினார்கள்.
அதன்பின் உறவின்முறைப் பெரியோர்களின் நன்முயற்சியால் பள்ளி மேம்பாடுற்று 1-7-1953ல் கூடக்கோவில் நாடார்கள் உயர்தர ஆரம்பப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக கல்வித்தந்தை திரு. நா. முனியப்பன் மற்றும் அவரது சகோதரர்கள் திரு. நா. குலசேகர நாடார் , திரு. நா. குருசாமி நாடார், திரு. நா. ரெங்கசாமி நாடார் அவர்களால் இரண்டரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடத்தை பெருந்தலைவர் திருமிகு. கு. காமராஜர் அவர்கள் 21-06-1962 அன்று திறந்து வைத்தார். அப்போது பள்ளியின் தாளாளராக திரு. நா. முனியப்பன் பொறுப்பேற்றார்கள்.
அதன்பின் பள்ளி வளர்ச்சியுற்று 13-7-1970ல் திரு. நா. முனியப்பன் அவர்களின் பெருமுயற்சியாலும், திரு. A.V.S. சௌந்திரபாண்டியன் உயர்திரு. ஆ. மாணிக்கநாடார், உயர்திரு. கு. கிருஷ்ணசாமி நாடார் அவர்களின் உறுதுணையாலும் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. உயர்நிலைப் பள்ளிக்குத் தேவையான ஐந்து ஏக்கர் பரப்பளவுள்ள விளையாட்டுத் திடலை உயர்திரு சி. நாச்சியப்ப நாடார் அவர்கள் வழங்கினார்கள். உயர்திரு ஆ.தியாகராஜன் B.A. அவர்கள் தாளாளராகப் பொறுப்பு ஏற்றார்கள். நமது பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பிற்ப்பட்டோர் நல மாணவர் விடுதியை உயர்திரு. வா. அருணாசலம் அவர்கள் ஏற்படுத்தி பல பள்ளிக் கட்டிடங்கள் கட்டவும் உறுதுணையாக இருந்தார்.
நமது பள்ளியின் தாளாளராக 2-6-1982 முதல் 4-6-1995 வரை திரு. மு. பிரபாகரன் B.A., அவர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள். 5-6-1995ல் திரு. N.R. ஆசைத்தம்பி M.Sc., அவர்கள் தாளாளராகப் பொறுப்பேற்றுள்ளார்கள்.
வளர்ந்து வரும் பள்ளிக்காக பதினோரு வகுப்புகள் கொண்ட கட்டிடங்களுடன் கடந்த ஆண்டுகளில் நமது பள்ளிக் கமிட்டியின் துணைத் தலைவர் திரு. கு. வேலாயுதம் , தலைவர் திரு. மு. பிரபாகரன்B.A.,செயலாளர் திரு. N.R. ஆசைத்தம்பி M.Sc., அவர்களின் முயற்சியாலும் உறவின்முறைப் பெரியோர்களின் ஒத்துழைப்பாலும் நான்கு அறைகள் கொண்ட மாடிக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சென்னைவாழ் கூடக்கோவில் நாடார்கள் உறவின்முறைப் பெரியோகள் கொடுத்த நிதியுதவியை திரு. ஆ. மாணிக்கநாடார் திரு. கு. வேலாயுதம் சென்னை சென்று பெற்று வந்து, உறவின்முறைப் பெரியவர்களின் ஒத்துழைப்புடன் வெள்ளி விழாக் கட்டடம் ஒன்று கட்டுவதற்கு உறுதுணையாய் இருந்தார்கள். வெள்ளி விழாக் கட்டடத்தின் மேல் மூன்று அறைகளைக் கொண்ட பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு விழா மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். 2003ஆம் ஆண்டில் புதிய வகுப்பறைக் கட்டடமும் அதன் மாடியில் வகுப்பறைக் கட்டடமும் கட்டப்பட்டு மாணவர்கள் பயனடைகிறார்கள். நம் பள்ளி 2003ஆம் ஆண்டில் உசிலைக் கல்வி மாவட்டத்திலேயே முதன்மையான பள்ளி என ஐந்து நட்சத்திரத் தகுதி பெற்றுள்ளது.
2005ஆம் ஆண்டு புதிய ஆய்வக கட்டடமும் , வகுப்பறைக் கட்டடமும் கட்டப்பட்டது. 2008ஆம் ஆண்டு ஆசிரியர் அறையாக மாடிக்கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டது. 2010ஆம் ஆண்டு ஆய்வக கட்டடம் மாடியில் கணிணி வகுப்பு அறை ஒன்று கட்டப்பட்டது. 2011ஆம் ஆண்டு கணிணி வகுப்பு அறை அருகில் மூன்று வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
திரு. N.R. ஆசைத்தம்பி M.Sc., திரு. மு. பிரபாகரன்B.A., திரு. கு. வேலாயுதம் இவர்களுடைய அயராத உழைப்பினாலும் தொடர்ந்து செய்த கடும் முயற்சிகளின் பலனாக நமது பள்ளி 20-5-2005 முதல் கூடக்கோவில் நாடார்கள் மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப் பெற்றுச் சிறப்பாகச் செயல்படுகிறது. 2005ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான தனித்தேர்வு மையமாக அங்கீகாரம் பெற்றது. 2005ஆம் ஆண்டு மேனிலை வகுப்பு செய்முறை தேர்வுகளுக்கு நம் பள்ளி தேர்வு மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுக்கான தனித்தேர்வு மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 2017-2018 கல்வி ஆண்டில் SSLC பொதுத்தேர்வு மற்றும் +2 பொதுத்தேர்வு எழுதியோர் சிறப்பாகத் தேர்வு பெற்றுள்ளனர். 2013-2014 ஆம் கல்வி ஆண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி துவங்கி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
“கசடறக் கற்க; அதன்பின் வழி நிற்க; ” என்பது பள்ளியின் குறிக்கோள். இக்குறிக்கோளை நிறைவேற்றும் பொருட்டு ஆசிரியப் பெருமக்களும் அலுவலக ஊழியர்களும் அயராது பாடுபடுகின்றனர். அவர்களுடன் பள்ளி நிர்வாகிகளும் மாணவ மாணவிகளும் நன்கு ஒத்துழைப்பதால் நம் பள்ளி தொடர்ந்து பல சாதனை வெற்றிகளைப் பெற்று வருகிறது.